×

மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் திடீர் ஊர்வலம்: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் பெண் உள்பட துப்பாக்கி ஏந்திய மாவோயிஸ்டுகள் ஊர்வலம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் பிரதமர் மோடி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிச் சென்றனர். கேரள மாநிலம் கண்ணூர், வயநாடு, பாலக்காடு உள்பட மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் இயக்கத்தினர் அதிக அளவில் உள்ளனர். இதைத் தொடர்ந்து கேரள அதிரடிப்படை போலீசார் இந்த வனப் பகுதிகளில் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். சில சமயங்களில் மாவோயிஸ்டுகளுக்கும், அதிரடிப்படை போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டையும் நடைபெறுவது உண்டு. இதில் இந்த இயக்கத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் போலீஸ் மீதும், போலீஸ் நிலையங்கள் மீதும் மாவோயிஸ்டுகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்கள் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு அடிக்கடி வந்து அங்குள்ள வீடுகளில் இருந்து அரிசி மற்றும் உணவுப் பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை கண்ணூர் மாவட்டம் அய்யன்குன்னு அருகே உள்ள வாளத்தோடு டவுனில் திடீரென ஒரு பெண் உள்பட 5 மாவோயிஸ்டுகள் வந்தனர். அவர்கள் அனைவரின் கைகளிலும் துப்பாக்கிகள் இருந்தன. வாளத்தோடு டவுனில் சுமார் அரை மணி நேரம் துப்பாக்கிகளுடன் அவர்கள் ஊர்வலம் நடத்தினர். அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு நோட்டீசையும் அவர்கள் கொடுத்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த நோட்டீசில், உலக வங்கியின் உத்தரவின்பேரில் நாட்டு மக்களுக்கு ரேஷன் பொருளை நிறுத்தும் பிரதமர் மோடி, முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பான போஸ்டர்களையும் அவர்கள் அப்பகுதியில் ஒட்டினர். அரை மணி நேரத்திற்குப் பின் மாவோயிஸ்ட்கள் அங்கிருந்து சென்றனர். காட்டுப்பகுதியில் இருந்து 2 கிமீ தொலைவில் தான் வாளத்தோடு ஊர் உள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் அதிரடிப்படை போலீசார் விரைந்து சென்று வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் மாவோயிஸ்டுகள் யாரும் சிக்கவில்லை. துப்பாக்கிகளுடன் மாவோயிஸ்ட்கள் ஊர்வலம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் திடீர் ஊர்வலம்: கேரளாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Maoist ,Kerala ,Thiruvananthapuram ,Maoists ,Modi ,
× RELATED வயநாட்டில் மாவோயிஸ்ட்- போலீசார் துப்பாக்கி சண்டை